கிருஷ்ணகிரி: நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. தீபாவளி பண்டிகைக்கு அடுத்தப்படியாக இந்துக்களால் அதிகளவில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விழாவில் விநாயகர் சதூர்த்தியும் ஒன்று. ஒவ்வொரு பகுதியிலும் விநாயகர் சதூர்த்தி அன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் வழிபாடு செய்வர்.
அது மட்டுமின்றி, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கி பொதுமக்கள் வழிபாடு செய்வது விழாவின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டில் முழு முதற்கடவுளாக இருந்து வரும் விநாயகரின் பிறந்தநாளான சுக்கில சதுர்த்தி தினத்தை விநாயகர் சதுர்த்தி என ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநாயகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விநாயகர் சிலை விவகாரம்; வடமாநில தொழிலாளர் தற்கொலை முயற்சி; நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப்.18) கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து நகரங்கள், கிராமங்கள் என பட்டிதொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். பின்னர், அந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வழிபாடு நடத்துவர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் விநாயகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர். அதைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு தடை; கலெக்டரின் மேல்முறையீட்டில் நீதிபதிகள் உத்தரவு!