இந்தியாவிலிருந்து பல்வேறு மாணவர்கள் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தங்கி மருத்துவப் படிப்பு பயின்றுவருகின்றனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சீன அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பயிலும் மாணவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கின்றனர்.
அவ்வாறு சீனாவிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு விமான நிலையத்தில் முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் ஏதும் இல்லாததால் அவர்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த மாணவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கு நோய்த்தொற்று ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒன்பது மாணவர்களும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், அவர்கள் தொடர்ந்து 20 நாள்களுக்கு கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் மாணவர் தங்களது உறவினர்களோடு பழகும்போது தொடுதல் போன்றவற்றில் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம் என்றும் அரசு மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கொரோனா இல்லை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!