கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த நபரின் உடலை 8 கிலோமீட்டர் நடந்து சென்று வனத்துறையினர் மீட்டு வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளல்லி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (70). இவர் ஆடு, மாடு மேய்த்து வந்தார். முனுசாமி நேற்று கடம்பன் குட்டை கிராமத்தில் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதாக கூறி வனப்பகுதி வழியாக சென்றவர், இரவு ஆன பின்பும் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை முனுசாமி சென்ற வனப்பகுதியில் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது யானை தாக்கி புதர் அருகே சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வனத்துறையினர், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டனர். கடம்பன்குட்டை அடர் வனப்பகுதி என்பதாலும், இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத கரடுமுரடான பகுதி என்பதாலும், சடலத்தை அவரது உறவினர்கள் டோலி அமைத்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே ஏழுகொட்டாய் கிராம பகுதிக்கு தூக்கி வந்தனர்.
பின்னர் முதியவர் முனுசாமியின் உடல் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானை தாக்கி உயிரிழந்த முனுசாமியின் குடும்பத்திற்கு வனத்துறையினர் சார்பில் இறுதி சடங்கிற்காக முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.