கிருஷ்ணகிரி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான உழவர் தின விழா மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன உபகரணங்களை செல்லக்குமார் வழங்கினார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500-க்கு மேற்பட்ட ஏரிகளை தூர்வார குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றார்.
குடிமராமத்துப் பணிகள் என்பது காமராஜர் ஆட்சி காலத்தில் நடைபெற்றது போல ஒட்டுமொத்த கிராம மக்களுடன் இணைந்து ஏரியை அரசு தூர்வாரினால் மட்டுமே இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறும் என்றும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது குடிமராமத்துப் பணிகள் அல்ல எனவும் சாடினார்.