கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜீவா, வசந்தா, கலா. இவர்கள் மூன்று பேரும் சகோதரிகள். மூவரும் அப்பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் கட்டி குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வசந்தா என்பவரின் மகன் லோகேஷ்க்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் ஓசூரிலுள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது உடல் நலத்தை விசாரிக்க அருகிலுள்ள மற்ற சகோதரிகளும் சென்றதால் அக்கா தங்கைகள் என மூன்று பேருக்கு அடுத்தடுத்து தொற்று பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்தா, கலா, ஜீவா ஆகியோர் அடுத்தடுத்த நாள்களில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதில் லோகேஷ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் உயிரிழந்த கலாவின் மகன் பாபு (40) என்பவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்தநிலையில், அவரும் நேற்று (மே.19) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஓசூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உள்பட 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.