கிருஷ்ணகிரி தர்கா கே.ஏ. நகர் வெங்கிட்டாபுரம் ஊராட்சிப் பகுதியில் இந்தியாவின் அருகில் உள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சட்டத்திற்குப் புறம்பாக கடவுச்சீட்டு, நுழைவுஇசைவு உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல் தங்கியுள்ளனர்.
இது குறித்து, கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த இக்பால்முல்லா (34), தஸ்லீமா (25), லக்கி (19) ஆகியோர் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இக்பால் முல்லாவும் தஸ்லீமாவும் கணவன்-மனைவி என்பதும் லக்கி இக்பால், முல்லாவின் நண்பர் என்பதும் தெரியவந்தது.
இக்பால் முல்லா புற்றுநோயால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதனால், இந்த நோய்க்கு சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு தனது மனைவி தஸ்லீமா, இரண்டு பெண் குழந்தைகள் தொன்னி முல்லா (3), முன்னி முல்லா (1½), நண்பர் லக்கி ஆகியோருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், இக்பால் முல்லாவின் நண்பரான கொல்கத்தாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் இக்பால் முல்லாவிடம் கிருஷ்ணகிரியில் தங்குமாறும் தான் மருத்துவச் செலவுக்காக பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன்படி இக்பால் முல்லா தனது மனைவி, குழந்தைகளுடன் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் அவர்கள் கடவுச்சீட்டு, நுழைவுஇசைவு எதுவும் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இக்பால் முல்லா, அவரது மனைவி தஸ்லீமா, லக்கி ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சென்னை புழல் சிறையிலடைத்தனர். மேலும், இக்பால் முல்லா, தஸ்லீமாவின் குழந்தைகளும் அவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: முகவர்கள் இல்லாமல் வாக்குப்பெட்டி திறப்பு - தர்ணாவில் குதித்த திமுகவினர்