கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பாராம்பரிய உணவு கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குர் உமா மகேஸ்வரி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் பேசுகையில், "இந்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் நோக்கமானது பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். உணவு பொருள் தயாரிப்பு தொழிலகங்களில் உணவுப் பொருளின் தயாரிப்பும் தரமும், தற்கால அறிவியல் வளர்ச்சியையொட்டிய உணவுப்பொருள் பதப்படுத்தும் நடைமுறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உணவு தொழில் புரிவோரை பதிவு சான்று (அ) உரிமம் பெற்று தரமான உணவு பொருள் கிடைக்கச் செய்தல்.
கலப்பட, காலாவதியான உணவு பொருள்களை தடை செய்தல். உணவுத் தொழில் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியது அனைத்து உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தரமாக, பாதுகாப்பான முறையில் உணவினை தயாரிக்க வேண்டும். குறிப்பாக நுகர்வோர்கள் பதிவுச்சான்று உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்க வேண்டும். வாங்கும் பொருள்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என பார்த்து பெற வேண்டும். தரமற்ற உணவு பொருள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கியது'