17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 2 நாட்களாக வேட்புமனுவையும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் டிவிஎஸ் காந்தி என்பவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் .
இவர் தற்போது மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், அடுத்தபடியாக 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் போட்டியிட்ட தேர்தலில் எத்தனை வாக்குகள் பெற்றீர்கள் என்று கேட்டபோது, தேர்தல் குறித்த எந்த ஆவணங்களையும் நான் பராமரிக்கவில்லை என்றார். தேர்தலில் வெற்றிப்பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்றும், மக்கள் என்ன கேட்டாலும் செய்வேன் என்று அலட்சியமாக பதிலளித்தார்.