கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் அருகே உள்ள ஏரியில் மீன்பிடிப்பதற்காக கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் குத்தகையெடுத்துள்ளார். மேலும் ஏரியிலேயே முருகன் உடன் நான்கு பேர்கள் குடிசை வீடு அமைத்து மீன் பிடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இன்று (அக.12) இரவு சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் குடிசைக்குத் தீவைத்துச் சென்றுள்ளனர்.
குடிசை வீடு என்பதால் தீ மளமளவென பரவி முழுவதும் எரிந்தது. அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அருகே வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்து தீயை அணைக்க முயன்றனர்.
மேலும் தீ அணைப்பு வாகனம் ஏரிக்கு வர வழியில்லாததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் குடிசையில் இருந்த 50 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், இரண்டு லட்சம் மதிப்பிலான பொருள்கள் என அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் அரசுப்பள்ளிக்கு தீவைப்பு!