கிருஷ்ணகிரி: ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ண ரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நரேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஓசூர் பகுதியில் 13 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். 2019ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 600 கோடி ரூபாயில் புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூர் பகுதியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலை, ஓசூர் பகுதியில் லித்தியம் பேட்டரி தயாரிக்க தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளன. ஓசூா் பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்காகவும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஓசூர் தொழில் வளர்ச்சி அடைகின்ற பகுதியாக உள்ளது.
வாகன நெரிசலை தவிர்க்க ஜூஜூவாடியில் இருந்து 220 கோடியில் 18 கிலோமீட்டர் புறவழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் சர்வதேச மலர் ஏல மையம் 20 கோடியில் அமைக்கப்படும். பூக்கள் ஏல மையம் அருகில் பிரம்மாண்டமான காய்கறி மையம் அமைக்கப்படும். ஓசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழு அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2013 - 14 காலக்கட்டத்தில் அதிமுக அரசு ஓசூரில் கலை அறிவியல் கல்லூரியை கொண்டுவந்தது. ஓசூர் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், ஓசூர் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
அதிமுக அரசு தொழில்துறை சிறக்க தடையில்லாத மின்சாரம் வழங்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சி மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தடையில்லா மின்சாரம் தொடர்ந்து தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வருவதால் தான், புதிய புதிய தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
தைத்திருநாளில் குடும்ப அட்டைக்கு 2,500 ரூபாய் நிதி உதவி, கரோனா பரவல் காலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி, கூட்டுறவு பயிர், கடன்பயிர் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி,100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் வேலைத் திட்டமாக மாற்றம், குடும்பத்துக்கு மாதம் 1,500 ரூபாய் திட்டம் ஆகிய அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.