தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் மத்திய அரசின் அறிவியல், தொழில் நுட்பத்துறையினர் இந்தியா முழுவதும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நடைபெறும் இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாணவர்களின் அறிவியல் திறன், கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சி நடந்து வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்திய பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் கூறுகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதில் மின்சாரமின்றி மிதிவண்டி மூலம் துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின், தானியங்கி விதை நடவு இயந்திரம், பசுமை வீடுகள் போன்ற பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அரசுப் பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாக செய்து, அதனை காட்சிப்படுத்தினர்.
இதில் சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, அடுத்தடுத்த மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'குடும்பத்தை மனதில் வைத்து இளைஞர்கள் வேகத்தை தவிர்க்க வேண்டும்'