கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர்ப்புற பகுதிகள், சிப்காட், மத்திகிரி ஆகிய இடங்களில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி, வீடுகளில் புகுந்து கொள்ளை என அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓசூர், மத்திகிரி, சிப்காட் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், பன்னார்கட்டா பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அவர்களிடம் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் வீடு புகுந்து திருடிவந்தது தெரியவந்தது. அவர்கள் திருடிய தங்க நகைகளை ஓசூர், உத்தனப்பள்ளி, அத்திமுகம் ஆகிய பகுதிகளில் உள்ள அடகுக் கடைகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்படடது.
இதையடுத்து அவர்கள் தந்த தகவலின்பேரில் திருட்டு நகைகளை வாங்கியதாக அடகுக்கடை உரிமையாளர்கள் சுரேந்தர், ராகேஷ், கன்பத், ராஜேந்திர சிங் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 480 கிராம் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆறு பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க : அதிவேகமாக பாலத்தில் பயணித்து கீழே விழுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு