கரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020 முதல் 3.5.2020 வரை தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் படி மே நான்காம் தேதியில் இருந்து மேலும் 14 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட மாவட்ட அட்டவணையை சிவப்பு (மிகைப்பாதிப்பு மாவட்டம்), ஆரஞ்சு குறைபாதிப்பு மாவட்டம், பச்சை-ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது லிருந்து 21 நாட்களாக எவ்வித பாதிப்பும் இல்லாத மாவட்டம் என்ற அடிப்படையில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் கடந்த 38 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் எந்த ஒரு கரோனா நோயாளியையும் கொண்டிராத பச்சை மண்டலத்தில் இருந்து வருகிறது.
எனவே, மார்ச் 4ஆம் தேதி முதல் 50 சதவீத பேருந்துகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம் என்பதுடன், போதிய சமூக இடை வெளியைக் கடைபிடிப்பது அவசியம். பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட பச்சைக்கொடி எனத் தெரிகிறது.
தொடர்ந்து தனியார் வாகனங்கள் குறிப்பாக கார் போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் தொடங்க வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஊரடங்கு விலக்குகளை பச்சை நிறப்பகுதியில் வழங்க மாநில அரசு நிலையை ஆராய்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு சிவப்பு அட்டவணைப் பட்டியலில் என்னென்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளதோ அந்த தடைகளை பச்சை மண்டலம் மீற இயலாது என்பது மேலதிக தகவல். இதுதொடர்பான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசும் அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.