நாட்டுப்புற கலைஞர்களுக்கு இறுதி சடங்காக மாறும் ஊரடங்கு: உதவுமா அரசு? - கிருஷ்ணகிரி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள்
கலைக்கு பெயர்போன தமிழ்நாட்டில், நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞர்களின் இறுதி சடங்கென இந்த ஊரடங்கு உத்தரவு மாறாமல், இறுதிவரை அவர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலர் வைக்கின்றனர். அப்படி அரசு செய்வதுதான் அறமும்கூட.
கரோனா ஒட்டுமொத்த இயந்திர மனிதர்களையும் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக அல்லல்படுகின்றனர். மாத சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்களது வீடுகளிலிருந்தே பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், வீதியை அலுவலகமாகக் கொண்டவர்களின் வயிற்றைக் கரோனா ஈவிரக்கம் இல்லாமல் சுருக்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிலை மோசமாக இருக்கிறது. அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் சூழ்நிலையை கரோனா உருவாக்கியுள்ளது.
ஆடலும் பாடலும் தமிழர் வாழ்வில் ஆதிமுதல் அந்தம்வரை கலந்திருப்பவை. குறிப்பாக, கிராமங்களில் வசிக்கும் ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் அவர்களுக்கே தெரியாமல் ஏதோ ஒரு நாட்டுப்புற கலை சமூகத்தில் ஒளிரும் வாய்ப்புக்காக ஒளிந்துகொண்டிருக்கும்.
அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருக்கூத்து,கோலாட்டம், தப்பாட்டம், சேவையாட்டம், கை சிலம்பம், தவில், தப்பட்டை, நாதஸ்வரம், கொம்பாட்டம், பம்பை முதலிய ஆட்டங்கள் விழாக்காலங்களில் ஆடப்படுகின்றன. அவை பயிற்றுவிக்கவும்படுகின்றன.
தற்போது விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் வாழ்வாதாரம் குறித்து, வீதி நாடகம் நடத்தும் வி. சங்கர், தெருக்கூத்து கலைஞர்கள் பெருமாள்,நாகராஜ், பரமசிவம், லட்சுமி நாராயண நாடக சபா பெருமாள் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், இப்போது தொடங்கி மூன்று மாததான் விழாக்காலம். இந்தக் காலங்களில் சம்பாதித்துதான் மீதமுள்ள ஒன்பது மாதங்களை நாங்கள் ஓட்ட வேண்டும்.
தற்போது வீட்டில் முடங்கி இருக்கும் எங்களது நிலையை அரசிடம் எடுத்துச்சொல்லி கோரிக்கைக்கூட எங்களால் வைக்கமுடியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1500க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு அரசின் நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில அரசிற்கும் இப்போது நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், ரேஷன் கார்டுகளுக்கு கொடுக்கும் நிவாரண உதவி நீங்கலாக எங்களுக்கு மற்ற தொழிலாளர் நலவாரியம் மற்றும் இதர வாரியங்கள் உதவி அளிப்போது போல் தமிழ்நாடு அரசும் உதவ வேண்டும். நாங்கள் இந்த சீசன் வாய்ப்பை முழுவதும் இழந்து தவிப்பதால் எங்களுக்கு மீதமுள்ள ஒன்பது மாத இழப்பை ஈடுகட்ட அரசு கட்டாயம் உதவி புரியவேண்டும்” என்றனர்.
இதனையடுத்து, கலைக்குழுவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாதவர் ஒருவர் பேசியபோது, “ கலைஞர்களை ஆதரித்துப் பாதுகாக்க வேண்டிய அரசு, பாராமுகமாக இருப்பதே நாட்டுப்புற கலையும், கலைஞர்களும் நலிவுற்று அழிந்துபோவதற்கு காரணம்.
மத்திய, மாநில அரசுகள் நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக ஒதுக்கிய நிதியானது பல ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை. எங்களுக்கான நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பரப்புரை பயணங்களிலும் கலைக்குழுக்களை கண்டுகொள்வதே இல்லை” என்றார் வேதனையுடன்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் கலை பண்பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குனர் ஏமநாதனைத் தொடர்புகொண்டபோது, “தமிழ்நாடு முழுவதும் தோராயமாக 35,000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் இழந்திருக்கிறோம் அதனால் எங்களுக்கு உதவ வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 கலைக்குழு அமைப்புகளிடமிருந்து தொலைபேசி அலைபேசி வழியாக கோரிக்கை வந்துள்ளது. அதனை அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.
“கலை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி, அள்ளிப் பருகவேண்டிய அமிர்தமடா அது” என்ற புகழ்பெற்ற வசனம் ஒன்று தமிழில் உண்டு. ஆனால், கரோனாவால் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞர்களின் விதியை மேலும் விபரீதமாக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
எனவே கலைக்கு பெயர்போன தமிழ்நாட்டில், நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞர்களின் இறுதி சடங்கென இந்த ஊரடங்கு உத்தரவு மாறாமல், இறுதிவரை அவர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலர் வைக்கின்றனர். அப்படி அரசு செய்வதுதான் அறமும்கூட.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவம்!