கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (32). இவர் ராமையா கார்டன் பகுதியில் கால்நடை பண்னை நடத்திவருகிறார். இங்கு மாடுகள், ஆடுகள், கோழிகள், புறாக்கள் உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன. இவர் வளர்த்து வரும் காளை மாடு விநாயகா, 2019ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அன்று பிறந்தது.
நேற்றைய விநாயகர் சதுர்த்தியுடன் காளைக்கு ஒரு வயது நிரம்பியதையொட்டி, பிரவீன் குமாரும் அவரது நண்பர்களும் காளைமாட்டிற்கு முதலாவது பிறந்த நாளை கொண்டாட முடிவெடுத்தனர்.
இதற்காக காளையை அலங்கரித்து அதற்கு குங்குமம், மஞ்சள் பூசி சால்வைகள் அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காளைக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கிருந்தவர்கள் காளைக்கு கேக் மற்றும் வாழை பழங்களை ஊட்டினர்.
காளை மாட்டிற்கு பிறந்த நாள் கொண்டாடிய அதன் உரிமையாளரின் செயல் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.