கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக காவேரிப் பட்டனம், ஊத்தங்கரை, தளி, ஒசூர், மத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி அமைதியாக நடைபெற்றுவருகிறது. பெரியவர்கள், புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். சுமார் ஆறு லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். முதல்கட்டத் தேர்தலில் 1,405 பதவிகளுக்கு 4,545 பேர் களத்தில் உள்ளனர்.
1,046 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 2,660 காவல் துறையினர் பாதுகாப்புடன் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிசிடிவி பதிவுகள், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. மேலும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என ஒரு வாக்காளர் நான்கு வாக்குகளை செலுத்தும் வகையில் தனித்தனி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், காவேரிப் பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆப்ரகாம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ,ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பாவகல் ஊராட்சியில் வேட்பாளர் லலிதா என்பவருக்கு தோள்பைக்குப் பதிலாக கைப்பை சின்னம் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் தேர்தல் அலுவலர்களிடம் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து காவல் துறையினர் சமரசம் செய்ததை அடுத்து மீண்டும் சீராக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோன்று, திம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை செலுத்த தள்ளாத வயதிலும் தனது பேரன் முனியப்பனின் உதவியோடு தனது வாக்கை மூதாட்டி செலுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: