கிருஷ்ணகிரி மாவட்டம்: சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி, அருள் மூர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்ற மகன் உள்ளார். மகன் க்ரித்தி வர்மா நான்கு வயது இருக்கும் பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்து உள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டியவாறு இருந்த மின்கம்பத்திலிருந்து சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்து உள்ளார்.
மகனின் இந்த நிலையை கண்ட அருள் மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறினார். சோக்காடி கிராமத்தில் எந்தவித ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் தனது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வருகிறார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத க்ரித்தி வர்மா எட்டாம் வகுப்பு வரை மிக நன்றாக படித்ததுடன், ஓவியம் வரைதல், தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்வது என தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து உள்ளார்.
இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த இவரது ஆசிரியர் ஆனந்தி, க்ரித்தி வர்மாவை நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததுடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்து உள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் கூகுள் CEO சுந்தர் பிச்சையின் பூர்வீக வீடு விற்பனை..! வாங்கியவர் யார் தெரியுமா?
இரண்டு கைகளும் இல்லை, தந்தை ஆதரவும் இல்லை இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாத க்ரித்தி வர்மா சிறப்பாக பயின்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து உள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி கூறுகையில் "தன்னுடைய மகனுக்கு 18 வயது பூர்த்தியான பின்பு தான் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக கூறினார்.
தற்பொழுது பல்வேறு மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் தன் மகனுக்கு கைகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென" கேட்டுக் கொண்டார். இவருடன் சேர்த்து 32 மாணவர்கள் அந்த பள்ளியில் தேர்வு எழுதிய நிலையில் க்ரித்தி வர்மா முதல் மாணவனாக வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!