கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 80), என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து அவரது பேரன் ராஜேஷ் கிரீம் (32) வந்து கலந்து கொண்டார். ராஜேஷ் கிரீம் அவரது தாத்தாவிற்கு இன்று ஐந்தாவது நாள், ஈமச் சடங்கு செய்வதற்காக காவிரி ஆற்றில் இறங்கிய போது, மணல் குழியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் நீரில் மூழ்கிய அவரை அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டுனர். ஆனால், அதற்குள் நீரில் மூச்சுத்திணறி ராஜேஷ் கிரீம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ராஜேஷ் கிரீம் உடலை மீட்டு அவசர ஊர்தி மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாங்கல் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் ராஜேஷ் கீரீம் (34) கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும், அவருக்கு திருமணம் ஆகி, ஐந்து வயதிற்குட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு கால்பந்து போட்டியில் விளையாட வந்திருந்த அரசு பள்ளி மாணவிகள் நான்கு பேர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள், தாத்தாவின் ஈமச் சடங்கில் கலந்துகொள்ள வந்த இளைஞர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க: Video:4 சிறுமிகள் பலி; புதுக்கோட்டையில் பள்ளியை முற்றுகையிட்டு கதறி அழுத பெற்றோர்