கரூர் தொழில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் என்கிற அனீஷ் (22). இவரது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் சமீபத்தில் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருட்டுச் சம்பவத்தில் மாயனூர் அருகே உள்ள இளைஞர் ஒருவர் ஈடுபட்டதாக அனீஷின் நண்பர்கள் உள்ளிட்டோர் சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து இளைஞரை வீரராக்கியம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அனீஷின் நண்பர்கள் தனியாக அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் பத்துக்கும் மேற்பட்ட கும்பல் சேர்ந்து, இளைஞரை சரமாரியாகத் தாக்கி இருசக்கர வாகனத்திருட்டு குறித்து விசாரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞர் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில், வழக்குப்பதிவு செய்த கரூர் மாயனூர் காவல்துறையினர், தலைமறைவான 10 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து சிறையிலடைக்கவும் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விதவை பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாமனார், மைத்துனர் மீது புகார்