கரூர் மாவட்டம் ஆதிவிநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா(25). பி.காம் சிஏ படித்த பட்டதாரியான இவருக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி என்பவருடன் காதல் ஏற்பட்டது. அதன்பின் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின் சக்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சௌமியா ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் சென்னையில் பணியாற்றும் காவலருமான சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சௌமியா, அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு உறவினர் என்று கூறி கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சௌமியா கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் வெளிவந்து, சுரேஷை பிரிந்து ஈரோட்டைச் சேர்ந்த டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் சீனிவாசன் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து போத்தனூர் பகுதியில் தங்கியிருந்தார்.
அப்போதும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மற்றும் தங்க நகைகளை பெற்றுள்ளார். அந்த வகையில் 37 சவரன் தங்கம் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதனடிப்படையில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் சௌமியா அடைக்கப்பட்டார்.
முன்னதாக தலைமறைவாக இருந்த சௌமியா காந்திகிராமத்தில் உள்ள பிரபல ஜோசியர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி சௌமியாவால் பாதிக்கப்பட்டவர், கண்ணன் என்பவர் பலருடன் அங்கு சென்று சௌமியாவை பிடித்து (செப்.15ஆம்) இரவு கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கரூர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுகுமார், குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரிடம் பல்வேறு அரசுத் துறையில் வேலை கல்வித்துறையில் பதவி உயர்வு என பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் சுகுமார் தெரிவிக்கையில், “கைது செய்யப்பட்ட இளம்பெண் சௌமியா (24). தனது 24 வயதில் மூன்று முறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். இளம் பெண்ணின் உண்மையான பெயர் சபரி, அனைத்து சான்றிதழ்களிலும் சபரி என்ற பெயரே உள்ளது. சௌமியா என்ற பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை அருகே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலமொன்றை வாங்கி தனது பெயரில் வைத்துள்ளார். ஒரு கிலோ அளவுக்கு வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். 59 கிராம் தங்க நகையே பறிமுதல் செய்துள்ளோம். இதன் மூலம் நீதிமன்றத்தில் பணத்தை இழந்த சிலருக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சௌமியாவை மீண்டும் விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தால் மோசடி செய்த மொத்த பணம் எங்கே வைத்துள்ளார், யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்பது குறித்து தெரியவரும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த கணவர் - கடத்திச் சென்ற மனைவி மீது வழக்குப்பதிவு