திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கண்ணிமெய்க்கான்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் (18). அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் சிவரஞ்சனி (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்கலை அறிவியல் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறார்.
இவரும், அஜித்தும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சிவரஞ்சனிக்கு அவரது குடும்பத்தார் திடீர் திருமணம் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத சிவரஞ்சனி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டு கிளம்பியுள்ளார். சிவரஞ்சனி, அஜீத் இருவரும் இன்று (பிப். 15) கரூர் மாவட்டம் மணவாடி அரசமரத்தான் கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து, வெள்ளியணை அருகே உள்ள கத்தாளபட்டி பழனியப்பன் என்பவரது காட்டுப்பகுதிக்குச் சென்ற இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதனால் மயக்கமடைந்து கிடந்தவர்களைக் கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு கரூர் காந்தி கிராமம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி அஜித் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்காக கரூர் காந்தி கிராமம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சிவரஞ்சனி மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளியணை காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கடலூரில் பெண்குழந்தை கடத்தல்: இளம்பெண் கைது!