கரூர்: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு சார்பில், பள்ளி வேலை நாள்களில் நாள்தோறும் சத்துணவுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மாணவர்களுக்கு மதிய உணவோடு முட்டை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கவுண்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அழுகிய முட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து சத்துணவு அமைப்பாளரை பணி இடைநீக்கம் செய்தார்.
முட்டையில் புழுக்கள்
தோகமலை வட்டாரத்தில் செயல்பட்டுவரும் நாகனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகளில் புழுக்கள் இருந்தன.
இது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து பள்ளிக்குச் சென்று சத்துணவு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இவ்வாறாக மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் தரமற்றதாக இருப்பது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் விநியோகிக்கும் ஒப்பந்ததாரர்கள் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதும், அங்கன்வாடி பணியாளர்களைப் பணியிடை நீக்கம் செய்வதும் தொடர்கதையாகிவருகிறது.
இதனால் தமிழ்நாடு அரசு தலையிட்டு தரமான சுகாதாரமான முட்டைகளை சத்துணவு மையங்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் சத்துணவுத் திட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வண்ணம் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள், தரமுள்ள சத்துணவை வழங்க அரசு உரிய வழிவகை (டெண்டர் உள்ளிட்ட பல விவகாரங்கள்) செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: Foxconn factory Rumour case: சாட்டை துரைமுருகன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!