தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவானது இன்று கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கடந்த வாரம் மத்திய அரசு சாலை போக்குவரத்து விபத்துகள் குறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்தது. அதற்கான சான்றிதழை மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் என்னிடம் வழங்கினர்" என்றார்.
இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தலைக்கவசம் வழங்கி மருத்துவ சிகிச்சை முகாமையும் அவர் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: சாலை விதிகளை மீறுவோர் கேமரா மூலம் கண்காணிப்பு!