கரூர்: மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், நெரூர் ஊராட்சிக்குட்பட்ட வேடிச்சி பாளையம் முதல் கல்லுப்பாளையம் செல்லும் சாலையிலுள்ள மயானமானது, மூன்று தலைமுறைகளாக தலித் மக்கள் பயன்படுத்திவரும் மயானமாகும். இதற்கான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு வழங்கியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், கரூர் வட்டார வளர்ச்சி துறை அலுவலர், நெரூர் நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் கரூர் நகர செயலாளர் முரளி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.