கரூர்: செல்லாண்டிபாளையம் அருகே சுக்காலியூர் காந்திநகரில் வழக்கறிஞர் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், கழிவுநீர் தொட்டிக்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக போடப்பட்ட கான்கிரீட் பலகைகளை அகற்றுவதற்கு கரூர் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் மோகன்ராஜ்(23) என்பவர் இன்று (நவ.15) இறங்கியுள்ளார்.
அப்பொழுது அலறல் சத்தம் கேட்டு அருகில் பணி செய்துகொண்டிருந்த கட்டடத் தொழிலாளர்கள் தோரணக்கல்பட்டி சிவா (எ) ராஜேஷ்(37), மலைப்பட்டி சிவக்குமார்(38) ஆகியோரும் கழிவுநீர் தொட்டி அடியில் சிக்கிக்கொண்ட மோகன்ராஜை காப்பாற்றுவதற்காக இறங்கியுள்ளனர்.
அப்பொழுது தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி மூவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூவரையும் மீட்டு கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கான்கிரீட் அமைக்கும்போது மூடப்பட்டதால் அதனுள் விஷவாயு உள்ளே இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'நான் விரைவில் மாஸ் எண்ட்ரி கொடுப்பேன்' - பிரியாவின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!