அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே, அவர் ஒரு இந்து என குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற கமல் இவ்வாறு பேசுகிறார் என பாஜக, சங் பரிவார் அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன. மீண்டும் பரப்புரைக்கு சென்ற கமல் மீது முட்டை, காலணி வீசப்பட்டன. இருப்பினும் கமல் மீது காலணி படவில்லை, அவர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். காலணி வீசிய நபரை ம.நீ.ம. கட்சியினர் கடுமையாகத் தாக்கினர். அவர்களிடம் இருந்து காவல் துறையினர் அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் பாஜக இளைஞரணி ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.
அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பிணையில் வந்த ராமச்சந்திரனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பொன்னாடை போர்த்தி வரவேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியிருந்தாலும், அதற்கு கருத்து ரீதியாக எதிர்வினையாற்ற வேண்டுமேயொழிய காலணி வீச்சு போன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அதை ஹெச். ராஜா வரவேற்பது சரியல்ல என திரைத்துறை பிரபலங்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.