கரூர் மாவட்டத்தில் புன்னம்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் அன்னை மகளிர் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டு மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ஜோதிமணி, “நாம் அனைவருக்குமே முதலில் பிடித்த உறவு அம்மாதான். எனது அம்மா கிராமத்தின் முற்போக்கு சிந்தனையாளர். ஏனென்றால் காந்தி, நேரு போன்ற பெரிய தலைவர்களின் புத்தகங்களை அவர் படிப்பார். மேலும் இதன் காரணமாகத்தான் நான் காங்கிரஸில் இணைந்தேன்” என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் அரசியல் என்றால் என்ன? என்று மாணவிகளுக்கு கேள்வி எழுப்பிய ஜோதிமணி, சரியான பதிலையளித்த மாணவிகளுக்கு மேடையில் அழைத்து பாராட்டி, அவர்களுக்கு புத்தகங்களைப் பரிசளித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மலையப்பசாமி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நான்காண்டில் விண்ணில் மனிதன்! - மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்