கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "செந்தில் பாலாஜி நான் எப்பொழுது பதவி விலகுவேன் என்று செய்தியாளரிடம் கேட்கச்சொல்லி வலியுறுத்துவதாக கேள்விப்பட்டேன்.தற்போது திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டு என்னை அரசியலிலிருந்து விலக சொல்வது சரியா..? அவர்தான் டிடிவி தினகரன் முதலமைச்சர் ஆகாவிட்டால் தூக்கில் தொங்குவேன் எனக் கூறினார். அது குறித்து அவரிடம், செய்தியாளர்களே கேட்டுச் சொல்லுங்கள். செந்தில்பாலாஜி தற்போது தூக்கில் தொங்க தயாரா..?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.