கரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை.09) ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர், தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கை, குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுப்பு நடவடிக்கை, கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலன் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசித்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் - திண்டுக்கல் சாலையில், வெள்ளியணை ஸ்ரீ ராகவேந்திரா மழலையர் தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அப்பள்ளி குழந்தைகள் காப்பகம் அறக்கட்டளை என்ற பெயரிலும் இயங்கி வந்ததை கண்டறிந்தனர்.
மேலும், 19க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தங்கி படித்து வந்தது குறித்து தெரிய வந்ததை அடுத்து, காப்பகம் நடத்தி வந்தவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் எங்கும் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில், விதிமுறைகளை மீறி காப்பகத்தில் குழந்தைகளை தங்க வைத்து அனுமதியின்றி நடத்தப்பட்டுவரும் அப்பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கியதுடன், 24 மணி நேரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், குழந்தைகளை பதிவு பெற்ற காப்பகத்தில் தங்க வைக்கவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களை சமூக நலத்துறை மூலம் வேறு விடுதிக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி தலைமையில், உறுப்பினர் மருத்துவர் ராமராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் தொடக்கக் கல்வித் துறை, சமூக நலத்துறை அலுவலர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'கேந்திரிய வித்யாலயாவில் தமிழை கட்டாயமாக்குங்கள்' - ஒன்றிய அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்