கரூர்: சங்க காலத்தில் வஞ்சிமாநகரம் என்ற அழைக்கப்பட்டு கரூர் மாவட்டம் தமிழர்களின் மொழி, கலாச்சாரம், வணிகம் வளர்க்கப்பட்ட நகரங்களில் ஒன்று. இம்மாவட்டத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து பின்னாளில் நாயக்கர்கள் தொடர்ந்து திப்பு சுல்தானும் கரூரை ஆட்சி நடத்தி உள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு திருச்சி மாவட்டத்திலிருந்து 1995ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
இப்போது, கரூர் மாவட்டத்தில் 154 ஊராட்சிகள் 11 பேரூராட்சிகள் 2 சிறப்பு நிலை நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்,7 தாலுகா அலுவலகங்கள் என அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தமிழுக்காக செம்மொழி மாநாடு பிரம்மாண்டமாக கோவையில் நடத்தப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களில் வாழ்க தமிழ் என்ற பதாகைகள் தமிழ்மொழியின் பெருமையை போற்றும் வகையில் வைக்கப்பட்டது.

குளித்தலையில் தமிழ் வாழ்க பதாகையின் நிலை
தமிழ் வாழ்க பதாகையின் நிலை ஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஒளிரும் மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட தமிழ் வாழ்க பதாகைகள் பயன்படுத்தபடாத அவல நிலை உள்ளது. குளித்தலை நகராட்சியில் இந்த நிலையைக் கண்ட தன்னார்வ இளைஞர்கள் கொதித்தெழுந்து குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமார் , குளித்தலை சட்டபேரவை உறுப்பினர் மாணிக்கம் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர்.
திமுக ஆட்சி தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் வாழ்க பதாகைகளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின் ஒளி ஊட்டி ஒளிரச் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கை
இது குறித்து கரூவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தெரிவிக்கையில், "நாடும் மொழியும் நமது இரு கண்கள் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்திய வாழ்க தமிழ் ஒளியூட்டும் பதாகைகள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றத்தால் கடந்த 10 ஆண்டுகளாக அந்தப் பதாகைகள் பராமரிப்பின்றி இருந்து வருகிறது. குளித்தலை நகராட்சியில் வாழ்க தமிழ் பதாகையை வைக்க தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அண்மையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரூர் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கரூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு வாழ்க தமிழ் பதாகை வைக்கப்படவில்லை.
கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மீண்டும் வாழ்க தமிழ் பதாகைகளை அமைக்க அரசு ஆணை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.