கரூர்: ராயனூர், ராயபுரம் தாலுகாவில் உள்ள இரும்புதிபட்டியில் இரண்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் இருக்கின்றன. இலங்கை வாழ் தமிழர்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதினாலும், தொழில் நிமித்தமாக வெளியே தங்க வேண்டிய நிலை இருப்பதாலும் மறுவாழ்வு முகாம் அதிகாரிகள் கண்காணிப்பில், வாடகைக்கு வீடு எடுத்து கரூரில் பல்வேறு இடங்களில் இலங்கை அகதிகள் தங்கி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவில் உள்ள ராமேஸ்வரம் பகுதிக்கு படகு மூலம் தஞ்சம் தேடி தமிழகத்திற்கு வந்தவர் கனப்பிரகாசம் மகன் தயானந்தன் (38). இவர் மதுரை அழகூர் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்துள்ளார்.
பின்னர், கரூர் ராயனூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பதிவு செய்துவிட்டு, தனியாக தான்தோன்றிமலையில் உள்ள அசோக் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இலங்கை வாழ் தமிழரான தயானந்தன், தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாகக் காட்டி இந்திய குடிமகனாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதனையடுத்து பாஸ்போர்ட் விசாரணையில் சந்தேகம் ஏதுமில்லாதபடி அனைத்து வகையான ஆவணங்களையும் சமர்ப்பித்த தயானந்தன், இந்திய அரசின் பாஸ்போர்ட் எனும் கடவுச்சீட்டை தபால் மூலம் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்லத் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தான்தோன்றி மலை போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பசுபதிபாளையம் வட்டார இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார், இலங்கை வாழ் தமிழரான தயானந்தன் குடியிருந்த வாடகை வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தயானந்தன் தான் ஒரு இலங்கைத் தமிழர் என்பதை மறைத்து, போலியான முகவரியைக் காட்டி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாந்தோணிமலை போலீசார், தயானந்தனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிவகிரி அருகே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் கைவரிசை!