தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கரூர் நகரின் மையப் பகுதியான ஜவஹர் பஜாரில், கரூர் நகர காவல் நிலையம் சார்பில் சிறப்பு புறக்காவல் நிலையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார், ஆய்வாளர்கள் மாரிமுத்து, சிவசுப்ரமணியன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், "கரூர் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், பேருந்து நிலையம், மேற்கு பிரதட்சணம் சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் 46 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மூன்று தொலை தூர கண்காணிப்பு கேமராக்களும், இரண்டு டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் பொருள்களை வாங்க வேண்டும் என்றும், கரோனா தொற்று பரவுவதால் கவனமுடன் இருக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.