கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் கைகழுவும் கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதனைச் சார்ந்த தொழில்கள் பிழைத்துக்கொண்டன. மக்கள் அனைவரும் கிருமி நாசினி, முகக் கவசங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர்.
அதனைப் பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள், அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். அப்படி ரூ.49 மதிப்புள்ள கிருமி நாசினி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு கிருமி நாசினி, முகக் கவசங்களை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்து.
அதன்படி, 200 மிலி கிருமி நாசினியின் அதிகபட்ச விலை ரூ.100ஆகவும், இரண்டு அடுக்கு முகக் கவசத்தின் விலை ரூ.8 ஆகவும், 3 அடுக்கு முகக் கவசத்தின் விலை ரூ.10ஆகவும் நிர்ணயித்தது. அதன்பின் நாளடைவில் பல்வேறு மாற்றங்கள் நிகழந்துவிட்டன. ஏனென்றால் கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் அத்தியாவசியப் பொருள்கள் ஆகிவிட்டன எனலாம்.
தற்போது அவற்றைப் பயன்படுத்தாதவர்களே கிடையாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி அத்தியாவசியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கிருமி நாசினிகள், முகக் கவசங்களின் விலை பல தரப்பட்ட மக்களிடையே எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு பக்கம் கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்த தினக்கூலிகள், கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் வாங்க மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். மறுப்பக்கம் கிருமி நாசினிகள், முகக் கவசங்களை அன்றாட செலவுகளில் சேர்ந்துகொண்டு பயன்படுத்துகின்றனர்.
ஒரு சிலர் விழிப்புணர்வு இல்லாமல் முகக் கவசம், கிருமி நாசினிகளை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். சிலர் எதற்கு செலவு வீட்டிலிருக்கும் சோப்பை பயன்படுத்தானால் போதும் என்கின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்கும்பொழுது, முகக் கவசம் பத்து ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு எளிமையாக கிடைக்கிறது.
அத்துடன் அதனை சலவை செய்து மற்றொருமுறை பயன்படுத்தலாம். ஆனால் கிருமி நாசினிகள் அப்படி அல்ல, ஒரு நாளில் இருமுறையும் பயன்படுத்துகிறோம். இருபது முறையும் பயன்படுத்துகிறோம். அதனால் மாத வருமானத்தில் இதற்கென தனியாக பணம் ஒதுக்கவேண்டியுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து கரூரில் பயிற்சி வகுப்புகள் நடத்திவரும் ஜெகநாதன் என்பவர் கூறுகையில், "முகக் கவசம், கிருமிநாசினி பயன்படுத்துவது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். ஒரு குடும்பத்திற்கு கிருமிநாசினி வாங்கினால் அது அவ்வளவு பெரிய செலவாக தெரியாது. ஆனால் அதிகப்படியானோர் கூடும் இடங்களான பயிற்சி வகுப்புகள், உணவகங்கள், சிறுகுறு தொழில்சாலைகள் உள்ளிட்டைவைகளில் கிருமிநாசிகளின் பயன்பாடு அதிகம்.
லாபம் வரும் வேளையில் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் தற்போதைய சூழலில் வருமானம் ரூ.300 என்றால், கிருமிநாசினி செலவே ரூ.200க்கும் மேல் ஆகிறது" என வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து ஞானவேல் என்பவர் தெரிவிக்கையில், "கரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக் கொள்வதற்கு கிருமிநாசினி, முகக் கவசம் முக்கியம். மக்கள் அதை புரிந்துகொண்ட அநாவசிய செலவுகளை குறைத்து, அதை கிருமிநாசினிகள் வாங்க பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பை விட பணம் முக்கியமல்ல" எனத் தெரிவித்தார்.
இருந்தும் தற்போதுள்ள சூழலில் கிருமிநாசினிகளுக்கான செலவில் பலதரப்பட்ட கருத்துகள் உள்ளன. ஆனால் , தினக்கூலிகள், சாலையோர மக்கள் உள்ளிட்டோர் கிருமி நாசினி பயன்படுத்துதலை, அத்தியாவசியமாக இல்லாமல் ஆடம்பரமாகவே கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தீங்கில்லா கிருமிநாசினி பயன்படுத்தும் சென்னை மெட்ரோ!