கரூர்: ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தேர்வுக்கு தயாராகுங்கள் (Pariksha Pe Charcha) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். மேலும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு குறித்தான தங்களது சந்தேகங்கள், பயம் உள்ளிட்ட கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய கல்வி இயக்குநரகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பினை ஏற்று கரூர் வெண்ணமலை அருகே உள்ள பரணி வித்யாலயா மற்றும் பரணி பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு குறித்தான தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் எழுதி தனது கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். மொத்தமாக 1,002 மாணவ - மாணவிகளுக்கு பிரதமர் எழுதிய தபால்கள் கிடைக்கப்பட்டுள்ளதால் மாணவ - மாணவிகள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக 2047-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதற்கு இடையூறாக உள்ள அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் இலக்கு என ஐந்து உயிர் மூச்சான கோரிக்கைகளான பஞ்சபிராண் (Pancha Piran) கொள்கைகளை கையில் எடுப்போம். இந்தியாவை மேலும் உயரத்துக்கு எடுத்துச் செல்வோம் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடையே நேர்மறையான உணர்வுகளையும் நம்பிக்கையும் ஏற்படுத்தி வழிகாட்டுகிறார்கள். இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டு தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகள் ஸ்டார்ட்அப்புகள் உள்ளிட்ட பல வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.
2047-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நமது திறமை பெற்ற இளைஞர்கள் ஒரு புகழ்பெற்ற வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளில் நமது ஆசிரியர்கள் இளைஞர்கள் இலக்குகளை நாட்டின் முன்னேற்றத்துடன் இணைக்க ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து, நல்ல ஆரோக்கியத்திற்கும், ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரணி கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம், ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ஆண்டுதோறும் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு குறித்தான அச்சத்தை போக்குவதற்காக பிரதமர் ‘தேர்வுக்கு தயாராகுங்கள்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இதனால் வளரும் இளைய தலைமுறைக்கு பிரதமர் கூறும் அறிவுரைகள் தேர்வு குறித்தான அச்சத்தை போக்கி நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. தங்கள் பள்ளி மாணவர்களுக்கு 1,002 தபால்களை பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு அனுப்பி இருப்பது மாணவர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களும் நாட்டின் பிரதமர் தமது குழந்தைகளை பாராட்டி கடிதம் அனுப்பி இருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது” என்றார்.
ஆயிரம் மாணவர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு தேர்வு குறித்தான கருத்துக்களை பதிவு செய்வதற்கு எப்படி முயற்சி மேற்கொண்டனர் என கேட்டதற்கு, “கடந்த 2023-ஆம் ஆண்டு துவக்கத்தில் மத்திய கல்வி இயக்குநரகத்திலிருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் கருத்து பதிவு செய்யலாம் என்று தெரிவித்த உடன், தங்கள் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள மற்ற வகுப்பு மாணவர்களும் தேர்வு குறித்தான தங்களது கருத்துக்களை பிரதமரிடம் நேரடியாக பதிவு செய்வதற்கு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக பெயர்களை பதிவு செய்தனர்.
அதை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், அனைவரையும் பங்கேற்க உறுதுணையாக இருந்து, இணையம் மூலம் கருத்துக்களை பதிவு செய்தனர். அதற்கு பிரதமர் பதில் அளிக்கும் வகையில் நேரடியாக தமிழில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமர் இதுவரை எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவச் செல்வங்களை பாராட்டி இவ்வளவு கடிதங்கள் குறிப்பாக ஒரே பள்ளிக்கு அனுப்பியது இல்லை.
மாணவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் கடிதம் அமைந்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தமிழில் பிரதமர் கடிதம் அனுப்பி இருப்பது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது” எனத் தெரிவித்தார்.