கரூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளருக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல் நிலையத்தை மூடி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய காவல் அலுவலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குணமடைந்து பணிக்கு திரும்பினர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், காவல் நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கரூர் துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:துணைக்காவல் ஆய்வாளருக்கு கரோனா; நகர காவல் நிலையம் மூடல்!