கரூர்: கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்படாத சாலைக்கு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு, பணம் வழங்கியது தொடர்பான சர்ச்சை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி குளித்தலை கருப்பத்தூர் மேலதாளியாம்பட்டி பகுதியில், திமுக எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை தரமற்ற நிலையில் இருந்ததை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சம்பவ இடத்துக்குச் சென்று, தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை பெயர்த்து மீண்டும் புதிய சாலை அமைக்க உத்தரவிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி செல்லும் சாலையை புதுப்பிக்க சுமார் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு மூலம் ஒப்பந்ததார் வீரராகவன் என்பவருக்கு சாலை அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த தார் சாலை புதுப்பிக்கும் பணி செப்டம்பர் 5ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது.
ஆனால், முறையாக தார் சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார் சாலையை அகற்றாமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த தார் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கைகளால் உருட்டினால் ஆடை போல சுருளும் அவலநிலை உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இதனையடுத்து, தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கபட்டி வழியாக வீரப்பூர் செல்லும் பிரதான சாலை, தரமற்ற முறையில் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! 13 பேர் பலி! உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்?