அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் ஆற்றில் கலக்கவிடப்படுவதாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பறக்கும் படையினர் இன்று (ஜூன் 22) கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னஆண்டாங்கோவில் சாலையிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட சாயக்கழிவு ஆலைகளை சேலம் சுற்றுச்சூழல் இணை ஆணையர் மதிவாணன் தலைமையில் ஆய்வுசெய்தனர்.
ஆய்வின்போது, கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து அமராவதி ஆற்றங்கரையோரம் கரூர் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சாய தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "ஆய்வு தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு நடைபெறும். அரசு விதிமுறைகளுக்கு முறைகேடாக பதித்துள்ள நிறுவனங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் இருக்கும்" எனத் தெரிவித்தார்.