தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றுவருகிறது.
கரூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு அலுவலங்களில் 831 மையங்களிலும், அதில் கிராமப்பகுதிகளில் 736 நகராட்சி பகுதிகளில் 95 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மேலும் வெளியூர் பயணம்செய்யும் மக்களுக்குப் பயன்பெற ஏதுவாகப் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் இன்றுமுதல் மூன்று நாள்கள்வரை விடாமல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வனவாசி, வெலஞ்செட்டியூர் சுங்கச்சாவடிகளிலும் இரண்டு சிறப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு பேருந்து, வாகனங்களில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது.
இம்முகாமில் 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதற்குமுன் எத்தனைமுறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் ஜனவரி 19ஆம் தேதிமுதல் 25ஆம் தேதிவரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுவருகிறது.
கரூர் மாவட்டத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு போலியோ சொட்டு மருந்துகளைக் குழந்தைகளுக்கு வழங்கினார். அவருடன் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: அரியலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு