கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள மாயனூர் கதவணை, அப்பகுதியின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. நாள்தோறும் பலர் வந்துசெல்லும் இப்பகுதிக்கு அருகே சரஸ்வதி (44) என்ற பெண் தள்ளுவண்டியில் மீன் வறுவல் கடை நடத்திவருகிறார். இவருக்கு உதவியாக மகள் பிருந்தா (18) இருந்துவருகிறார்.
சரஸ்வதி நேற்று வழக்கம்போல் கடையைத் திறந்து நடத்திவந்த நிலையில், சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் அப்பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவர் கடையை அகற்றுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு, அப்பெண் மீன் விற்ற பிறகு அவ்விடத்தைவிட்டு போவதாகக் கூறியுள்ளார். இருப்பினும், விஜய் ஆனந்த் மதுபோதையில் இருந்ததால், தள்ளுவண்டி கடையை சேதப்படுத்தியுள்ளார். அப்போது, அவருடன் வேறு சிலரும் இருந்துள்ளனர். இதனால், அருகிலிருந்த மீன் கடை வியாபாரிகளுக்கும் விஜய் ஆனந்த் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது.

இதனையறிந்த மாயனூர் காவல் துறையினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.