கரூர்: பரமத்தி அருகே கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி கல் குவாரிக்கு எதிராகப்போராடி வந்த சட்டவிரோத கல் குவாரிக்கு எதிரான இயக்கத்தைச்சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் மினி லாரி வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார், கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவுற்ற பின்பும், உடலை பெற்றுக்கொள்ள மறுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தலைமையில் உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நேற்று (செப்.13) கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது.
இதனிடையே இன்று 5ஆவது நாளாக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு கூடத்திற்கு முன்பு காலை 11 மணியளவில் கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனிடம், மக்களைப் போராடத் தூண்டிய குற்றத்திற்காகவும் இதனால் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கை காரணமாக வைத்தும் கைது செய்வதாகக்கூறி கைதுசெய்தனர்.
அப்போது, சமூக அலுவலர் முகிலன், உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு நீதி வழங்கக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இருப்பினும் காவல் துறையினர் அவரை குண்டு கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதேபோல சட்டவிரோத கல் குவாரி இயக்கத்தின் கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகியும் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளருமான சண்முகம் இன்று காலை 9 மணியளவில், அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு தாந்தோணி மலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராகப்போராடி வந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மற்றும் சண்முகம் ஆகியோரைக் கைது செய்தது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்கள் நலக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், “சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராகப்போராடியதற்காக கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் உடற்கூராய்வு மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கத் தயாராக இருந்த சூழ்நிலையில், காவல் துறையினர் அதனை தடுத்து, குண்டுக்கட்டாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு' - அமைச்சர் செந்தில் பாலாஜி