கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செ.4) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் பகுதி செம்மலர் நகர் அருந்ததியர் காலணியில் தனிநபருக்கு ஆதரவாக அருந்ததியர் சமூகத்துக்குச் சொந்தமான கருப்பண்ணசுவாமி கோயிலை அப்புறப்படுத்திய, கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்( Union Development Officer) மற்றும் காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கிருபாவதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர் வேலுசாமி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் எனக் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், ‘பட்டியல் இன அருந்ததியர் மக்கள் ஐந்து தலைமுறையாக வழிபாடு நடத்தி வந்த கருப்பண சுவாமி கோயில், தனிநபர் ஒருவருக்கு ஆதரவாகக் கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் இணைந்து கோயிலை அப்புறப்படுத்தி, இருதரப்பு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும், காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர் வேலுசாமி, கருப்பண்ணசுவாமி கோயிலுக்குப் பின்புறம் உள்ள நிலத்தில் வீட்டுமனைப் பிரித்து விற்பனை செய்வதற்காக திடீரென ஏற்படுத்திய வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, கருப்பண்ணசுவாமி கோயிலை அப்புறப்படுத்துவதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் இரு முறை புறம்போக்கு நிலத்தில் கோயில் உள்ளதாகக் கூறி நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
காதப்பாரை ஊராட்சியில் வெவ்வேறு சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர் எனவும், அனைவரும் அரசு புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட அருந்ததியர் சமூகத்தின் கோயிலை மட்டும் இடித்து ஆக்கிரமிப்பு எனக்கூறி ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி இருப்பது வேதனை அளிக்கிறது’ என்றார்
தொடர்ந்து பேசுகையில், ‘வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த இடத்தில் தனி நபருக்குப் பாதை உள்ளதாக எவ்வித குறிப்புகளும் இல்லாத நிலையில் தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உண்மையைக் கண்டறிந்து தனிநபருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அரசு அதிகாரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இடிக்கப்பட்ட கருப்பண்ணசுவாமி கோயிலை மீண்டும் அந்த இடத்தில் கட்டுவதற்கு வருவாய்த் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது கரூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ஜனநாயக அமைப்புகளைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த இருப்பதாகத் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அருகம்பாளையம் பட்டியல் இன மக்கள் வழிபடும் கோயிலை அரசு அதிகாரிகள் துணையுடன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கோயிலை அப்புறப்படுத்தியுள்ள விவகாரம் கண்டிக்கத்தக்கது.
தவறு செய்யும் அதிகாரிகள் மீது கரூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் தடுக்கப்பட வாய்ப்புகள் குறையும்’ எனத் தலித் அமைப்புகள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா மற்றும் சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, ஆதித்தமிழர் கட்சி தொழிற்சங்க தலைவர் துரை அமுதன், சமநீதி கழகத்தின் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:பழனி கோயில் 'இந்து அல்லாதவர் நுழைய தடை' பதாகைக்கு எதிராக இந்து அறநிலையத்துறை புதிய மனு!