கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் அருகில் மதுரை, சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் இன்று (ஆக.15) மயில் ஒன்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது.
சாலையில் சென்றபோது வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து உயிரிழந்த மயிலை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வன காவலர் விஜயகுமார், மயிலை மீட்டு கடவூரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு இந்திய தேசிய பறவை மயில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என வனத்துறை காவலர் தெரிவித்தனர்.