கரூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையாத்தில், கடந்த மார்ச் 11ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது மட்டுமல்லாமல், கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என ஒரு சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது இரு சமூகத்தினர் இடையேயான பிரச்னையாக மாறி உள்ளது.
இதன் நீட்சியாக, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள், ஆலைகள் மற்றும் அங்கு இருக்கும் வெல்ல கொட்டகைகள் மற்றும் வாகனங்களில் இரு சமூகத்தினரும் தொடர்ச்சியாக தீ வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த மே 13ஆம் தேதி நள்ளிரவில் பரமத்தி வேலூர் அடுத்த வி.புதுப்பாளையத்தில் முத்துசாமி என்ற தனி நபருக்கு சொந்தமான கரும்பு ஆலையில் வெல்ல கொட்டகை மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் மர்மக்கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களான ராகேஷ் (19), சுகுராம் (28), யஷ்வந்த் (21) மற்றும் கோகுல் (23) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களை நேற்றைய முன்தினம் (மே 15) மாலை 6.10 மணியளவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று (மே 17) அதிகாலை 4 மணியளவில் சிகிச்சைப் பெற்று வரும் நான்கு பேரில், ராகேஷ் என்ற இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்ததாக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று உடற்கூராய்வு நடைபெறுகிறது.
பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்து தொடர்பாக நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சைப் பெற்று வரும் மூன்று பேரில் ஒருவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஏற்கனவே, பதற்றத்துக்கு உள்ளாகி இருக்கும் ஜேடர்பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இயங்கி வரும் ஆலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெல்ல ஆலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. ஜேடர்பாளையம் சம்பவத்தில் அமைச்சர் ஆய்வு..