கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
![தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-eb-minister-senthilbalaji-speach-news-vis-scr-tn10050_12082021005638_1208f_1628709998_880.jpg)
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு 26 பெருநிறுவனங்களிடமிருந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியாக ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளைப் பெற்றுக்கொண்டனர்.
![நன்கொடை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-eb-minister-senthilbalaji-speach-news-vis-scr-tn10050_12082021005638_1208f_1628709998_1048.jpg)
ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் நன்கொடை
தொடர்ந்து பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் தடுப்பூசி செலுத்தும் முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்பொழுது பொதுமக்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னை மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் 137 மருத்துவமனைகளில் இதுபோன்று பெருநிறுவனங்களின் பங்களிப்பில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
![மா. சுப்பிரமணியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-eb-minister-senthilbalaji-speach-news-vis-scr-tn10050_12082021005638_1208f_1628709998_608.jpg)
பின்னர் கோவையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு கோவை மண்டலத்தில் மட்டும் 107 மருத்துவமனைகளில் சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் காவேரி மருத்துவமனையோடு இணைந்தும் திருச்சியில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்களிடமிருந்து இன்று ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. இதில் அப்போலோ தனியார் மருத்துவமனையின் பங்களிப்பு 37 லட்சம் ரூபாயையும் சேர்த்து ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் தற்பொழுது பெறப்பட்டுள்ளது.
பசுமை நிறைந்த கரூரே இலக்கு
தடுப்பூசியைச் செலுத்துவதற்கு சேவைக் கட்டணம் என காவேரி மருத்துவமனை ரூ.150 கட்டணத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல அப்போலோ நிறுவனமும் அறிவிக்க உள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செந்தில்பாலாஜி, "கரூர் மாவட்டத்தில் வேளாண்மையைப் பலப்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள முக்கிய வறண்ட ஏரிகளான தாதம்பாளையம் ஏரி, பஞ்சப்பட்டி ஏரி, வெள்ளியணை ஏரி, கடவூர் ஏரி ஆகியற்றில் காவிரி, அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீரைக் கொண்டு நிரப்பும் திட்டம் தயார்செய்யப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடு கணக்கிடும் பணியை அரசு அலுவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
![செந்தில் பாலாஜி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-eb-minister-senthilbalaji-speach-news-vis-scr-tn10050_12082021005638_1208f_1628709998_564.jpg)
அதேபோல கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் வேளாண் நிலத்திற்குப் பாசன வசதி பெற குழாய்கள் மூலம் நீர் பாய்ச்சுவதற்கு 10 புதிய நுண்ணீர் ஏற்று பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் அனைத்துப் பகுதிகளும் பசுமை நிறைந்தவையாக மாறும்.
'திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?'
வேளாண்மையை மேம்படுத்தும் பணியினை அரசு முன்னெடுத்துவருகிறது. இதனை அனைத்து நிலைகளிலும் முன்னெடுக்க வேண்டும். அதேபோல கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை தேவை அடிப்படையில் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்" எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், பொது சுகாதாரத் துறை, இணை இயக்குநர்கள் சம்பத், ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Exclusive: ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளின் நிலை என்ன?