கரூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழ்நாடு அரசின் ஆலோசனையோ ஒப்புதலோ இல்லாமல் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆக்ஸிஜன் அனுப்பப்பட்ட பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் நோய் தொற்று அதிகம் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் தமிழ்நாட்டின் நிலையை பற்றி சற்றும் சிந்திக்காமல் இவ்வாறு மத்திய அரசு நடந்திருப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி.
இவ்வாறு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை மத்திய அரசு நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி நீட், எட்டு வழி சாலை, எரிவாயு குழாய்கள் ஆகிய பிரச்னைகளில் மத்திய அரசு தனது முடிவுகளை திணித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் உயிரும் முக்கியமே.
இந்நிலைக்கு நாடு தள்ளப்பட்டதற்கு மத்திய அரசின் அக்கறையின்மையும் மெத்தனப்போக்குமே காரணம். பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை பிற நாடுகளுக்கு பொறுப்பில்லாமல் ஏற்றுமதி செய்ததால்தான் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம். இன்று ஆயிரக்கணக்கானோர் தேவையான மருந்துகள் இல்லாமல் உயிருக்கு போராடி வருகிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வது அதன் பொறுப்பின்மையையே காண்பிக்கிறது.
எனவே தமிழகத்திற்கு வர வேண்டிய ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவையான அளவு உடனடியாக கொள்முதல் செய்து இருப்பை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுகொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.