கரூர் மாணவி தற்கொலை தொடர்பாக நேற்று (நவ.24) மாலை 5 மணியளவில், மாணவியின் தாயார், அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “காவல்துறை சரியான கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. காவல்துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறிய அவகாசம் கோரியுள்ளனர். யூ-ட்யூப்பில் அதிகம் செய்திகள் வருவதை பார்த்தேன். பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்கள் இவ்வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை திருப்திகரமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு, “தினந்தோறும் வழக்கு விசாரனை குறித்த தகவல்களை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காவல்துறையினர் ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்” எனக் கூறுகின்றனர் .
இதையடுத்து, யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா எனச் செய்தியாளர்கள் கேள்விக்கு, “வேதியியல் பாட வேலையில் சில குறிப்புகளை எனது மகள் குறித்து வைத்துள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் உள்ள யாரும் தொந்தரவு அளிக்கவில்லை என உறுதியாக கூற முடியும்.

ஆகவே பள்ளியில் இருந்து தான் எனது மகளுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது எனச் சந்தேகிக்கிறேன். விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” எனப் பதில் அளித்தார்.
கரூர் மாவட்ட தனியார் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு மாணவி நவம்பர் 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்தது நினைவு கூரத்தக்கது.