ரோட்டரி, தனியார் நிறுவனத்தின் முன்னேற்பாட்டில் நடமாடும் மருத்துவமனையின் திறப்பு விழா, கரூர் மாவட்டம் வீரராக்கியம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைவகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், திட்ட அலுவலர் கவிதா, அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்டம் வீரராக்கியம் பகுதி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவமனைகளை நிறுவும் திட்டத்தை 2017, 2018ஆம் ஆண்டுகளில் ரோட்டரி மாவட்ட ஆளுநராக இருந்த கோபாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் சுமார் ரூ.44 லட்சம் மதிப்பிலான நடமாடும் மருத்துவமனையை கரூர் ரோட்டரி சங்கத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது.

இந்த நடமாடும் மருத்துவமனையை, கரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்குத் தேவையான ஓட்டுநர், செவிலியர், மருத்துவர், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார் மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வடிவத்தோடு அமைத்துள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க : திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய திருடன்... வலைவீசி பிடித்த காவல் துறை!