கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மாடு விழுந்தான்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (32), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
இவர் இன்று விடியற்காலையில் வழக்கம்போல் பால் கறக்க நச்சலூர் பொட்டல் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரது வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு அன்பழகனின் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்து கிடந்த அன்பழகன் உடலைக் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேருடன் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தட்டிக்கேட்டதால் அண்ணன் கத்தியால் வெட்டிக் கொலை