கரூர் மாவட்டத்தில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கக்கோரி அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜியும், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவை அளித்தனர்.
பின்னர் இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஊதியம் வழங்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது.
மூன்று மாத காலமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை தொழிலாளர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கவேண்டும் எனக் கூறி மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்த மனுவை புகாராக அளித்துள்ளோம்.
ஒரு வார காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி தீர்வு காணாவிட்டால் தொழிலாளர்களுடன் சேர்ந்து கரூரில் வரும் 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். " என்றார்.
இதை தொடர்ந்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் உள்ள ஏழை எளிய நடுத்தர விவசாய மக்கள் 100 நாட்களுக்காவது வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது மத்தியில் நடைபெற்று வரும் மோடி ஆட்சி நூறு நாள் வேலைத்திட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான நிதியை ஒதுக்க மறுக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து உரிய நேரத்தில் போராடி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டை ஆண்டு வரும் மத்திய அரசின் அடிமை அரசு, மத்திய அரசை சந்தோஷப்படுத்த மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் புறக்கணித்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: காவல்துறை வாகனங்களுக்குக் 'காவல்' என தமிழில் பெயர் மாற்றம்!