நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையோட்டி, அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்புவிழா நடைபெற்றது. இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, திமுக-வின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சென்ந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மத்திய அரசிடமிருந்து நிதிப்பெற்று செய்த நலத்திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாத்திக்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, தன்னை மட்டுமே வளப்படுத்திக்கொண்டார். நான் அமைச்சராக இருந்தபோது கரூர் மாவட்டத்துக்கு செய்த நலத்திட்டங்களை தம்பிதுரை செய்ததாகப் பேசி வருகிறார். தம்பிதுரையின் கடைசி தேர்தலாக இது இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி, இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நிச்சயம் நாடாளுமன்றம் செல்வார். தேர்தலில் வெல்வதற்கு, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகின்றனர். மக்களை விலைக்கு வாங்கி வெற்றிபெற்று விடலாம் என மனக்கோட்டை கட்டுபவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனத் தெரிவித்தார்.